இந்து என்பவர் ஆறுகளில் ஏராளமானோருடன் சேர்ந்து குளிப்பார்கள் என்றும், ஆனால் ஒரு இந்துத்துவவாதி தான் மட்டும் கங்கையில் தனியாக குளிர்த்தார் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பரப்புரைக்கு முன்னோட்டமாக அமேதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கங்கையில் ஒருவர் மட்டும் குளிப்பதை முதன்முறையாக இப்போது தான் காண்கிறேன். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்றோரைக் கூடச் சேர்த்துக் கொள்ளாமல் பிரதமர் நரேந்திர மோடி கங்கையில் தனியாக குளித்தார்" என்று குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னை இந்து என்று கூறிக் கொள்கிறார் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஆனால் அவர் ஒருபோதும் உண்மையைப் பாதுகாத்ததில்லை என்று விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடி எடுத்த தவறான முடிவுகளால், ஏழைகளும், நடுத்தர மக்களுக்கும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.