15- வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகளைப் பெற்ற நிலையில், குடியரசுத் தலைவராவது உறுதியாகியுள்ளது. மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், சுமார் 70% வாக்குகளைப் பெற்றுள்ளார் திரௌபதி முர்மு. அசாம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, குடியரசுத் தலைவர் என்ற முறையில் அரசியலமைப்பின் பாதுகாவலராக திரௌபதி முர்மு செய்லபடுவார் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள திரௌபதி முர்மு இல்லத்திற்கு இன்று (21/07/2022) இரவு 08.20 மணிக்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். அத்துடன், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நாட்டாவும் திரௌபதி முர்முவுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "திரௌபதி முர்முவின் சாதனை வெற்றி நமது ஜனநாயகத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகும். திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.