இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. அதேபோல், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலையும் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், தற்போது வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையில் 266 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக டெல்லியில் 1,734 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் (19 கிலோ) விலை தற்போது 2000.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேபோல் சென்னையில் 1,865 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலை (19 கிலோ) 268 ரூபாய் அதிகரித்து 2,133 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதால், உணவகங்களில் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.