கேரளாவில் யானை ஒன்று வெடி வைத்த பழத்தைச் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவைச் சேர்ந்த 15 வயதான கருவுற்ற பெண் யானை உணவுத் தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்ற போது, வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டுப் படுகாயமடைந்து உயிரிழந்தது. யானையின் வாயில் அந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட பழம் வெடித்துள்ளது. இதனால், வாய் மற்றும் தும்பிக்கை பகுதிகளில் பலத்த காயமடைந்த அந்த யானைப் பற்களையும் இழந்துள்ளது.
இந்த வெடியினால் படுகாயமடைந்த அந்த யானை வலி தாங்கமுடியாமல் அங்குள்ள வெள்ளையாறு ஆற்றில் இறங்கியது. அந்த யானை, பின்னர் உயிர் பிரியும் வரை ஆற்றை விட்டு வெளியேறவே இல்லை. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "கேரளாவின் மலப்புரத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருகிறது. ஒழுங்காக விசாரிப்பதற்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். உணவில் பட்டாசு வைத்துக் கொல்வது என்பது இந்தியக் கலாச்சாரமே அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.