போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை களையச் சொன்ன காவல்துறை!
வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய விவசாயிகளைக் கைது செய்த காவல்துறை, அவர்களது ஆடைகளைக் களையச்சொன்ன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் பண்டெல்காண்ட் பகுதி கடந்த பல மாதங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி திகம்கார் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டத்தைக் கண்டுகொள்ளாத ஆட்சியரால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கல்வீச்சு தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இவர்களை கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும், தண்ணீர் பீச்சியடித்தும், தடியடி நடத்தியும் களைக்க முயற்சித்துள்ளது காவல்துறை. இந்த சம்பவத்தின் போது 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்துள்ளனர். மேலும், 12 விவசாயிகளைக் கைதுசெய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று, ஆடைகளைக் களைந்து நிற்கவைத்துள்ளனர்.
அந்தப் பகுதியைச்சேர்ந்த காங்கிரஸ் தலைவர் யத்வேந்திர சிங், விவசாயிகளின் நிலையை புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளாக பதிவுசெய்துள்ளார். மேலும், இதை தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் இருந்தும், காவல்துறை அதிகாரி இதை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே பண்டெல்காண்ட் பகுதியில் ஜூன் மாதம் விவசாயிகளால் நடத்தப்பட்ட போராட்டம் பின் கலவரமாக மாறியது. அப்போது, காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்