பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
மனதின் குரல் (மான்கீ பாத்) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றி இருந்த பிரதமர் மோடி "ஆகஸ்ட் 13 முதல் 15 வரை இந்திய மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்" என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய அவர் "பிரதமர் மோடிஜியின் அழைப்பை ஏற்று அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளின் நினைவை போற்றும் விதமாகவும் தேசியக் கொடியின் மகிமையை போற்றும் விதமாகவும் நாம் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றி பாரத தேசத்தின் மகிமையை உலகிற்கு எடுத்துக் காட்டுவோம்" எனக் கூறியுள்ளார் . மேலும் அவர் திருப்பூர் குமரன் மற்றும் கட்டபொம்மன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களையும் மேற்கோள் காட்டி பேசியுள்ளார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் பிரதமரின் அழைப்பை ஏற்று சமூக வலைத்தளங்களில் தங்களது சுயவிவர படமாக இந்தியத் தேசியக் கொடியை மாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.