டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். அதே சமயம், மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங்கின் டெல்லி வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து சஞ்சய் சிங், அமலாக்கத்துறையால் கைது (04.10.2023) செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.
இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த சோரன் ஆகியோரின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்தியா கூட்டணியின் பேரணி நேற்று முன் தினம் (31-03-24) நடைபெற்றது. இதில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று (01-04-24) கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்தியா கூட்டணியின் பேரணி, பா.ஜ.க அரசுக்கு வலுவான எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவில், இந்த பேரணி நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி இதில் இருந்து பாடம் கற்க வேண்டும். ஏனென்றால், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களுக்காக எதிராக பா.ஜ.க தாக்குதல் நடத்துகிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி அணுகுமுறை சரியில்லை.
டெல்லி அரசால் நடந்ததாக கூறப்படும் மதுபான உரிம ஊழல் குறித்து போலீசில் முதல் முதலில் புகார் அளித்தது காங்கிரஸ் தான். டெல்லி அமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட போது, கெஜ்ரிவாலை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய கட்சியும் காங்கிரஸ் தான். அவர் கைது செய்யப்படும் வரை காங்கிரஸ் இதை செய்து வந்தது. தற்போது தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் மாற்றியுள்ளது. கெஜ்ரிவாலின் கைது, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெரிய வாழ்க்கை பாடம். முடிவுகளை எடுக்கும்போது நாட்டின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும்.