எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால், நாட்டில் கரோனா பரவல் அதிகரித்ததால், முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார்.
இந்தநிலையில், முதுநிலை நீட் தேர்வு நான்கு மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அதிக அளவு மருத்துவர்களை ஈடுபட செய்யும் விதமாக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். முதுநிலை நீட் தேர்வு குறைந்தது 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா தொடர்பான பணிகளில் 100 நாட்கள் ஈடுபடும் மாணவர்களுக்கு, இனி அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.