‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி
பத்மாவத் படத்தின் திரையிடலுக்கு எதிராக ராஜ்புத் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி, தீபிகா படுகோனே நடித்து திரையிடலுக்காக காத்திருக்கும் திரைப்படம் பத்மாவத். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியதில் இருந்து பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துள்ளது படக்குழு. சஞ்சய் லீலா பன்சாலி தாக்கப்பட்டார். படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. தீபிகா படுகோனேயின் தலைக்கு விலை பேசப்பட்டது. பத்மாவதி என்ற பெயர் பத்மாவத் என மாற்றப்பட்டது. இத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகும் இந்தப் படம் வரும் வியாழக்கிழமை திரையிடப்படும் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்புத் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் 200 பேர், பத்மாவத் படத்தின் திரையிடலை எதிர்த்து பேரணி ஒன்றை நடத்தினர். சுயமரியாதை பேரணி என பெயரிடப்பட்டிருந்த இந்தப் பேரணியில் கையில் வாள்களுடன் பெண்கள் கலந்துகொண்டனர். பின்னர் பத்மாவத் படத்தைத் தடை செய்யுங்கள் இல்லையேல் சாவதற்கு அனுமதி கொடுங்கள் என கடிதம் எழுதி அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பத்மாவத் படத்திற்கு நான்கு மாநிலங்கள் தடைவிதித்த நிலையில், அந்தத் தடையை நீக்கக்கோரி மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.