மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில், நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில், ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.க கூட்டணியும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே வேளையில், அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் பையை அதிகாரிகள் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் பகுதியில், தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தவ் தாக்கரே ஹெலிகாப்டரில் வந்தார்.
தரையறங்கிய ஹெலிகாப்டரில் உள்ள உத்தவ் தாக்கரேவின் பைகளை தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ‘பிரதமர் மோடி, அமித்ஷா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரின் பைகளையும் சோதனை செய்வீர்களா?’ என்று உத்தவ் தாக்கரே, அந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். உத்தவ் தாக்கரேவின் பைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்வது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவர்களுடைய வேலைகளை பின்பற்றுகின்றனர். நானும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன். நீங்கள், என் பையை சோதனை செய்த விதத்தில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் பைகளையும் சோதனை செய்வீர்களா?. இந்த பயனற்ற விஷயங்கள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நான் ஜனநாயகமாக கருதவில்லை. இது ஜனநாயகமாக இருக்க முடியாது. ஜனநாயகத்தில், யாரும் பெரியவர்கள் அல்லது சிறியவர்கள் அல்ல” என்று தெரிவித்தார்.