உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியில் ஒன்றரை மாதமாக பாகிஸ்தான் பெண்ணும் அவருடைய நான்கு குழந்தைகளும் வசித்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை அந்த பகுதியில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பாகிஸ்தானை சேர்ந்த சீமா, அவரது நான்கு குழந்தைகள் மற்றும் சச்சின் என்பவர் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உத்தரப்பிரேதச மாநிலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர் சச்சின். இவர் ஆன்லைனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த போது பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சீமாவுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் கொண்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. அதைத் தொடர்ந்து தனது காதலனைப் பார்ப்பதற்கு இந்தியா வரத் திட்டமிட்ட சீமா, தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து தனது காதலி மற்றும் குழந்தைகள் தங்குவதற்கு சச்சின் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சச்சின், சீமா, நான்கு குழந்தைகள், வீட்டின் உரிமையாளர் என மொத்தம் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் அதிகாரி டி.சி.பி. சாத் மியா கான் தெரிவிக்கையில், “பாகிஸ்தான் பெண் உட்பட கைதானவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர். தற்போது அந்த பெண்ணிடமும் வீடு கொடுத்த சச்சினிடமும் விசாரித்து வருகின்றோம். விசாரணை முடிந்த பிறகு மீதி விவரங்கள் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.