ஜம்முவிலுள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 27 ஆம் தேதி அதிகாலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், இரண்டு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்தனர். இந்தியாவில், தீவிரவாதிகள் ட்ரோன்கள் மூலம் நடத்திய முதல் தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவம் அல்லது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் பங்கு இருக்கலாம் எனப் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள், "தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை உருவாக்க பாகிஸ்தான் ராணுவமோ அல்லது ஐ.எஸ்.ஐயோ உதவியிருக்கலாம் எனத் தெரிகிறது. மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களில் பயன்படுத்தப்பட்ட 'பிரஷர் பியூஸ்' என்ற கருவி பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் கருவி போலவே உள்ளது" எனத் தெரிவித்துள்ளன.
'பிரஷர் பியூஸ்' என்பது தரையில் விழுந்த பிறகு வெடிகுண்டை வெடிக்கச் செய்யப் பயன்படுத்தப்படும் அமைப்பாகும். கன்னி வெடிகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.