பத்மநாப கோயிலில் தரிசனம் செய்ய கே.ஜே.ஜேசுதாசுக்கு அனுமதி
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் அனுமதி கோரியிருந்த நிலையில், அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட நாட்டின் பல உயரிய விருதுகளை பெற்றுள்ள கே.ஜே.யேசுதாஸ் கடந்த 56 ஆண்டுகாலமாக பாடி வருகிறார். குறிப்பாக இந்து கடவுள்களை பற்றியும் ஐயப்ப சுவாமியை பற்றியும் இவர் அதிகம் பாடியுள்ளார்.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ள கே.ஜே.யேசுதாஸ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சமீபத்தில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு இவர் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதேபோல், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கடம்புழா தேவி அம்மன் ஆலயத்திற்கு சென்ற போதும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், அவரது விண்ணப்பத்தை பரிசீலித்துள்ள கோயில் நிர்வாக செயற்குழு, ஜேசுதாசுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்க முடிவெடுத்துள்ளது.