புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேலும் ஒரு பெண் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னை மதுரவாயலில் நான்கு வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரியிலும் மாணவி, இளம்பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி குருமாம்பேட் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி காயத்ரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த ரோஷினி என்ற 28 வயது பெண் ஒருவர், தொடர் காய்ச்சல் காரணமாகக் கடந்த நான்கு நாட்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் ஒரே நாளில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.