பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டம் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இதில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
அப்போது பேசியவர், “என்னைச் சந்தித்த பலரும் பாஜகவிற்காகவும், நாட்டிற்காகவும் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். அவர்களில் ஒருவரை நோக்கி, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களது குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர்? எனக் கேட்டேன். அதற்கு அவர், சொந்தமாக கடை வைத்திருந்தேன் அது நன்றாக செயல்படாததால் மூடி விட்டதாக குறிப்பிட்டார். தனக்கு மனைவியும், குழந்தையும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதைக் கேட்ட நான், முதலில் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் என்றேன்.
ஏன் என்றால், தனது குடும்பத்தை யாரால் சரியாக நிர்வகிக்க முடியவில்லையோ, அவரால் நாட்டையும் நிர்வகிக்க முடியாது. அதனால், குடும்பத்தை பராமரிப்பதற்கும், குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு, கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் பணியாற்றலாம்”என்றார்.