Skip to main content

சாதிவாரி கணக்கெடுப்பு; உரிய முடிவை எடுக்க பிரதமரை வலியுறுத்தினோம் - பீகார் முதல்வர் பேட்டி!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

bihar cm

 

இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தக் கோரி சில கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்.டி பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தெரிவித்தது.

 

இருப்பினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன. இதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளமும் இதே கோரிக்கையை முன்னிறுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில், அனைத்து கட்சி குழு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.

 

இந்த அனைத்து கட்சி குழுவில், 10 கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். பிரதமரை சந்தித்ததற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், "சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து குழுவில் உள்ள அனைவரது கருத்துக்களையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது குறித்து உரிய முடிவை எடுக்குமாறு பிரதமரை வலியுறுத்தினோம். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மாநில சட்டசபையில் இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து அவரிடம் விளக்கினோம். பீகார் மக்களும், நாட்டு மக்களும் இந்த விவகாரத்தில் ஒரே கருத்தைத்தான் கொண்டுள்ளனர். நாங்கள் கூறியதைக் கேட்ட பிரதமருக்கு நன்றி. இப்போது இதில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் அனைத்து கட்சி குழுவில் இடம்பெற்றிருந்த பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், "பீகாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டுமென எங்கள் குழு பிரதமரை சந்தித்துள்ளது. இப்போது இந்த விஷயத்தில் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் ஏன் பயப்படுகிறார்?” - ராகுல் காந்தி கேள்வி

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Why is the Prime Minister afraid of conducting a caste wise census Rahul Gandhi Question

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நாட்டில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என்று இரண்டு சாதிகள் மட்டுமே இருப்பதாக பிரதமர் மோடி அடிக்கடி கூறி வந்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றியபோது  தன்னை மிகப்பெரிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) என்று வர்ணித்தார்.

ஒருவரைச் சிறியவர், ஒருவரைப் பெரியவர் என்று கருதும் இந்த மனநிலையை மாற்ற வேண்டியது அவசியம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினராக இருந்தாலும், அவர்களைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக நீதி வழங்க முடியாது. சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரதமர் ஏன் பயப்படுகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

“தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை தொடங்குக...” - டிடிவி தினகரன்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Start caste wise census work in Tamil Nadu TTV Dhinakaran

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “சமூகநீதியை பாதுகாக்கவும், கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் முதன்முறையாக பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் ஏற்கனவே இருந்த 50 சதவிகித இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கும், அதற்கு சட்டரீதியாக எந்தவித தடையும் இல்லை என்பதற்கும் பீகார் தொடங்கி ஆந்திரா வரையிலான பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் நிலையில் தமிழகம் மட்டும் மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களை முன்னேற்றுவதற்கான சமூகநீதி நடவடிக்கையான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.