அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலாகும் என நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இந்த புதிய அபராத விதிமுறைகள் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், “போக்குவரத்து விதிமீறல், ஹெல்மெட், மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், சீட்பெல்ட் அணியாமல் கார் இயக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு கடும் அபராதங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் ஓவர் ஸ்பீட் பிரிவிற்கும் கடும் தண்டனைகள் மற்றும் அபராதங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி இனி மாநில முதல்வர்கள் ஆனாலும் அவர்கள் அதிக வேகத்தில் சென்றால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். சிசிடிவி கேமராக்கள் யார் ஓட்டுகிறார்கள் என்ற பாகுபாடு பார்க்காததால் இனி மாநில முதல்வர்கள் ஓவர் ஸ்பீட் சென்றால் அதிக அபராதம் செலுத்த வேண்டி வரும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் இந்த புதிய சட்டதிருத்தத்தில் சில புதிய விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறாக வாகனம் ஓட்டினால் ரூ 10000 அபராதமாக விதிக்கப்படும்.
விபத்தில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக 'கோல்டன் ஹவர்' எனப்படும் அந்த நேரத்துக்கு முன்னுரிமை அளித்து அனைத்து மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதே போல வாகன விபத்தில் உயிரிழப்பவர்களுக்கான இன்ஷுரன்ஸ் தொகையும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.