லட்சத்தீவிற்கான புதிய அதிகாரியாக குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரஃபுல் படேலை கடந்த 2020 டிசம்பரில் நியமித்தார் பிரதமர் மோடி. அவர் அங்கு நியமிக்கப்பட்டப்பிறகு நிறைய சீர்த்திருத்தங்களை கொண்டுவந்தார் படேல். ஆனால், அந்த சீர்த்திருத்தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதிரொலித்தன.
இந்த நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார் படேல். அந்த கட்டுப்பாடுகள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள ராகுல் காந்தி, அந்த அதிகாரியை திரும்பப்பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதுகுறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘’புதிய சீர்த்திருத்தம் என்கிற பேரில் லட்சத்தீவில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாட்டுகளும், விதிமுறைகளும் மக்களுக்கு எதிராக இருக்கிறது. தன்னிச்சையாக இவைகளை கொண்டு வந்துள்ளார் பிரஃபுல் படேல். லட்சத்தீவின் மக்களின் வளர்ச்சி குறித்து ஆலோசிப்பவர்கள், அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் மதிக்க வேண்டும். பிரஃபுல் படேலின் நடவடிக்கைகளால், தங்களின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்குள்ளாவதாக மக்கள் கருதுகின்றனர். மக்களின் வாழ்வாதாரமும், வளர்ச்சியும் குறுகிய வர்த்தக லாபங்களுகாக தியாகம் செய்யப்படுகின்றன.
பஞ்சாயத்து வரைவு சட்டத்தில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள பஞ்சாயத்து நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என்கிற சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டவிரோத சட்டத்திலும், விலங்குகள் பாதுகாப்பு சட்டங்களிலும் திருத்தம் கொண்டு வந்துள்ளார்ப் பிரஃபுல் படேல். மேலும், லட்சத்தீவில் மதுபானங்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியிருக்கிறார். மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் நிறுத்தி வைக்கும் இடங்கள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் லட்சத்தீவின் பூர்வக்குடி மக்களின் சமூக, கலாச்சாரங்களுக்கு எதிரானது. இது தவிர, கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கியிருக்கிறார் அந்த அதிகாரி.
குற்றங்கள் மிக குறைவாக இருக்கும் லட்சத்தீவில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கும் எதிராக விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளையும் கட்டுப்படுகளை திரும்பப் பெற வேண்டும் ‘’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ராகுல் காந்தி.