ஒவ்வொரு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் பெருகி வரும் சாலை விபத்துகளை குறைக்க அரசு தரப்பில் அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. இருந்தும் விபத்துக்கள் குறைந்தபாடு இல்லை. குறிப்பாக செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டும்போது விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனை சரிக்கட்டும் முயற்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலான நபர்கள் அதனை கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவோரை திருத்தும் முயற்சியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில்...வாகனம் ஓட்டும்போது செல்போனில் யாராவது பேசினால் அவர்களை புகைப்படம் எடுத்து, உரிய சான்றுகளுடன் அதனை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், தவறு செய்த வாகன ஓட்டிகளின் லைசென்சை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் விசாரணைக்கு வரும்படி சம்பந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பு வழங்கி, அதன்பின்னர் அவரது லைசென்சை ரத்து செய்யும் நடவடிக்கையை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.