ஆங்கிலேய காலத்தில் தனி ராணுவத்தையே உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் 1945 ஆம் ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்ததாக அதிகாரபூர்வமாக சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுதந்திரத்திற்கு பிறகும் நேதாஜி உத்தரப்பிரதேசத்தின் பைசாபாத் பகுதியில் கும்நாமி பாபா என்ற பெயரில் வாழ்ந்து வந்ததாக சிலர் கூறி வந்தனர். இதன் உண்மைத்தன்மையை அறிய இருவரின் கையெழுத்துக்களையும் ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்ய கையெழுத்து ஆய்வில் 40 ஆண்டுகால அனுபவம் உள்ள, இதற்கு முன் சுமார் 5000 சோதனைகளை மேற்கொண்ட அமெரிக்காவின் கார்ல் பகதெட்டிடம் இருவரின் கையெழுத்துக்கள் உள்ள கடிதங்கள் கொடுக்கப்பட்டன. இதனை ஆய்வு செய்த அவர் இரண்டையும் எழுதியவர் ஒருவர் தான் என்றும், இரு கையெழுத்து அம்சங்களும் ஒத்து போகின்றன என்றும் அறிக்கை சமர்ப்பித்தார். இந்நிலையில், கும்நாமி பாபா குறித்து கண்டறிய கோரி உ.பி.யின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நேதாஜியின் மகளான லலிதா போஸ் மற்றும் மூத்த மகனான சுரேஷ் சந்திர போஸ் ஆகியோர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
அதன்பின், இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும் என உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, நீதிபதி விஷ்ணு சஹாய் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் ஆய்வுகளை மேற்கொண்டது. இந்நிலையில் இந்த விசாரணை கமிஷனின் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில், கும்நாமி பாபா என்பவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்ல எனக் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "கும்நாமி பாபாதான் நேதாஜி என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இவர் நேதாஜியின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். மேலும், கொல்கத்தாவில் இருந்து கும்நாமி பாபாவிற்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில், "என்னிடம் நீங்கள் எப்போது வருகிறீர்கள்? நேதாஜியின் பிறந்த நாளில் வந்தால் நாம் அனைவரும் மிகவும் மகிழ்வோம்'' எனக் எழுதப்பட்டுள்ளது. எனவே இதை வைத்து பார்க்கும்போது கும்நாமி பாபாவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் வெவ்வேறு நபர்கள்" என கூறப்பட்டுள்ளது