நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கல்வி நிலையங்களின் தொடர் முடக்கம், தேர்வு மையத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்கள், தேர்வு நேரத்திலான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை குறித்து பல தரப்பினரும் கவலை தெரிவித்து வந்தனர். ஆனால், மத்திய அரசு தனது முடிவில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை http://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.