மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சல பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பொது மக்களிடையே பேசிய அவர், "அருணாச்சல பிரதேச மக்களின் ஆதரவுடன், சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, இரயில் பாதை ஆகியவற்றை உருவாக்க முடிந்திருக்கிறது, மேலும் மற்ற மாநிலங்களுடன் விமான இணைப்பையும் மேம்படுத்தியுள்ளோம்.இதற்கு காரணம் மக்களாகிய நீங்கள்தான். நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை காரணமாகவே இது சாத்தியமானது. நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக இந்த 'சௌகிதார்' இருக்கிறேன். உங்களின் ஆசீர்வாதமே எனக்கு இரவு பகலாக உழைக்க பலம் தருகிறது, ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய ஊக்கத்தை தருகிறது" என கூறினார்.