லிங்காயத்து மடம் ஒன்றின் மாடாதிபதியாக இஸ்லாமிய இளைஞர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் அசுதி கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான முருகராஜேந்திர கோரனேஷ்வர லிங்காயத்து மடம் உள்ளது. இந்த மடத்திற்கு 33 வயதான இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மடத்தில் சேர்ந்த திவான் ஷெரீஃப் முல்லா என்ற இளைஞர் பசவண்ணர் மற்றும் மற்ற லிங்காயத்து அடியார்களின் கருத்தியலையும் கற்றுத் தேர்ந்துள்ளார்.
இவருக்கு கடந்த ஆண்டு தீட்சை வழங்கப்பட்ட நிலையில், அவர் மடத்திலேயே தங்கி முழு நேரமாக பசவண்ணரின் கருத்தியலை போதித்து வந்துள்ளார். இந்நிலையில், அசுதி லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதியாக திவான் ஷெரீஃப் முல்லா நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். இதற்கு பெரும்பாலான லிங்காயத்து மடங்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ள நிலையில், சில இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.