நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்.13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு தொடங்கிய முதல் நாளிலிருந்து நான்காவது நாளான இன்று வரை ஆளுங்கட்சி எம்.பி.க்கள், ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்று நாடாளுமன்றப் பிரச்சனைகள் குறித்து விவாதித்தது தவறு என்றும் அதற்கு அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதானி உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நான்காவது நாளான இன்றும் நாடாளுமன்றம் முழுவதுமாக முடக்கப்பட்டது.
நேற்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இங்கிலாந்தில் ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கள் இந்திய ஜனநாயக அமைப்புகளையும், நாடாளுமன்றத்தையும் இழிவுபடுத்தும் செயல். ஒவ்வொரு குடிமகனும் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறான். ஏனென்றால் நாடாளுமன்றம் என்பது எம்.பி.க்கள் இணைந்த அமைப்பு மட்டமல்ல; அது இந்திய மக்களின் குரல். எனவே நாடாளுமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக நாடாளுமன்றத்துக்கு வராமல் புறக்கணித்துள்ளார் ராகுல்” என்று குற்றச்சாட்டு வைத்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. ராகுல் காந்தி, “இன்று(16ம் தேதி) காலை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் நான் பேச வேண்டும் என தெரிவித்துள்ளேன். நான்கு அமைச்சர்கள் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதன் காரணமாக எனது பார்வையை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க உரிமை உள்ளது. நிச்சயம் நாளை(17ம் தேதி) நாடாளுமன்றத்தில் பேச எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என நம்புகிறேன்.
சில நாட்களுக்கு முன்பு மோடி மற்றும் அதானி குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். ஆனால், அந்தப் பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. நான் மக்களுக்கு தெரியாத விஷயங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசவில்லை.
அரசும் பிரதமரும் அதானி விவகாரம் குறித்து பயப்படுகிறார்கள். அதன் காரணமாக நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தோன்றுகிறது. அதானிக்கும் மோடிக்கும் இடையான உறவு என்ன என்பதே முக்கிய கேள்வி.
என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் நான் பேச வேண்டியது என்பது எனது ஜனநாயக உரிமை. இந்திய ஜனநாயகம் இயங்குகிறது என்றால் என்னால் நாடாளுமன்றத்தில் பேச முடியும். நீங்கள் பார்ப்பது இந்திய ஜனநாயகத்தின் சோதனை” என்று தெரிவித்துள்ளார்.