முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிக்கையை மேற்கோள்காட்டி, அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா.
இந்தியா, சீனா இடையே நடைபெற்ற மோதல் குறித்து மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது வீரர்களின் தியாகத்திற்கு உரிய நீதியை வழங்கிட பிரதமர் மற்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இதில் சரியான நீதி வழங்கப்படவில்லை எனில், அது வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். ஏப்ரல் 2020 க்குப் பின்னர் இன்றுவரை பல ஊடுருவல்களை மேற்கொண்டு கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் த்சோ ஏரி போன்ற இந்தியப் பகுதிகளுக்கு சீனா வெட்கமின்றி சட்டவிரோதமாக உரிமைக் கோருகிறது" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள ஜெ.பி.நட்டா, "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் அறிக்கை வெறும் வாய் வார்த்தைதான். துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் நடத்தை, நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற அறிக்கைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். நினைவில் கொள்ளுங்கள், இதே காங்கிரஸ் கட்சிதான் எப்போதும் நமது ராணுவத்தைக் கேள்வி கேட்டு மனச்சோர்வை ஏற்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியப் பிரதேசத்தின் 43,000 கி.மீ. தொலைவுக்கு மேல் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டது. ஒரு சண்டை கூட இல்லாமல் காங்கிரஸ் ஆட்சி சீனாவிடம் சரணடைந்தது. அவர் பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலத்தைச் சீனாவிடம் ஒப்படைத்தார். 2010 முதல் 2013 வரை சீனா மேற்கொண்ட 600 ஊடுருவல்களும் அவர் பிரதமராகி இருந்தபோதே நடைபெற்றன" எனத் தெரிவித்துள்ளார்.