இந்தியாவில் கரோனா பரவலால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்ட்ராவில் தற்போது மீண்டும் கரோனா பாதிப்புகள் தலை தூக்க தொடங்கியுள்ளன. மேலும் நாட்டிலேயே அதிகபட்சமாக அம்மாநிலத்தில் 450 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையிலும் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி மஹாராஷ்ட்ராவில் உறுதியான 450 ஒமிக்ரான் பாதிப்புகளில் 190 பாதிப்புகள் மும்பையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஏற்கனவே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதை தடை செய்யும் வகையில், மும்பையில் ஜனவரி 7 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடையுத்தரவு, தற்போது ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைகள், திறந்தவெளி மைதானங்கள், நடைபாதைகள், பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு மாலை ஐந்து மணி முதல் காலை ஐந்து மணி வரை செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் திருமணம், அரசியல் மற்றும் மத கூட்டங்களில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமெனவும், இறுதி சடங்குகளில் இருபது பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமெனவும் மும்பை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.