கோதுமை, கடுகு உட்பட ஆறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய மசோதாக்களை கடும் எதிர்ப்பு எழுந்துவரும் சூழலில், இம்மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமல் போகும் என விமர்சனங்கள் எழுத்து வருகின்றன. இந்நிலையில், கோதுமை, கடுகு உட்பட ஆறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவிப்பின்படி, கோதுமையின் ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,975 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்லி ஒரு குவிண்டாலுக்கு 75 ரூபாயும், கடுகு ஒரு குவிண்டாலுக்கு 225 ரூபாயும், சன்னா பருப்பு குவிண்டாலுக்கு 225 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்குக் கடந்த ஆறு ஆண்டுகளில், குறைந்தபட்ச ஆதார விலையாக ஏழு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது காங்கிரஸ் ஆட்சி காலமான 2009-இல் இருந்து 2014 வரை வழங்கப்பட்ட தொகையை விட இருமடங்கு அதிகம் எனவும் நரேந்திர சிங் தோமர் கூறினார்.