Skip to main content

"நடுத்தர ஏழை மக்களின் வாழ்வியலை பாதிக்கிறது " - மத்திய ரயில்வே அமைச்சரிடம் மனு அளித்த எம்.பிக்கள்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021
MPs who petitioned the Union Railway Minister

 

மத்திய ரயில்வே அமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி மற்றும் கலாநிதி வீராச்சாமி எம்.பி ஆகியோர் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். ரயில்வே துறை தொடர்பான சில முக்கிய மாற்றங்களைச் செய்யக் கோரி இந்த மனு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “பெருந்தொற்று ஏற்பட்டவுடன் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தைக் காரணம் காட்டி சாதாரண பயணி வண்டிகள் ரத்து செய்யப்பட்டன. 2019 -20 இல் 3715 சாதாரண பயணி வண்டிகள் ஓடின விரைவு வண்டிகளும் புறநகர் வண்டிகளும் ரத்து செய்யப்பட்ட போது அவையும் ரத்து செய்யப்பட்டன.

 

அவற்றில்  200 கிலோமீட்டருக்கு மேல் ஓடிய 500 வண்டிகள் விரைவு வண்டிகள் ஆக மாற்றப்பட்டன. ஆனால் விரைவு வண்டிகளும் புறநகர் போக்குவரத்து அத்தியாவசிய பயணிகளுக்கும் திறந்துவிடப்பட்ட பின்னும் சாதாரண பயணி வண்டிகள் இயக்கப்படாமல் தொடர்கிறது. அது மட்டுமல்ல விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளும் இணைக்கப்படுவது இல்லை. சாதாரண பயணி வண்டிகள் மொத்த  பயணிகளில் 22 சதமானம் ஆகும். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் கிராமப்புற மக்கள் ஆகும். கிராமங்களிலிருந்து ஒட்டிய நகரங்களுக்கு அவர்கள் அன்றாடம் தங்கள் பொருள்களை எடுத்துச்சென்று விற்பதற்கும் மாணவர்கள் நகரத்தில் படிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் நகரங்களுக்கு சென்று வர இந்த சாதாரண வண்டிகள் மிகவும் பயன்பாடு உடையனவாக இருந்தன.

 

இவர்களுக்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால் மிகக் குறைந்த கட்டணத்தில் சென்று வருவது கிராமப்புற மக்களுக்கு மிகவும் சாத்தியமானதாக இருந்தது. மொத்த வருமானத்தில் ஆறு சதமானம் தான் இந்த பயணி வண்டிகளில் இருந்து வருமானம் என்றபோதிலும் சமூக கடமை ஆற்றும் நோக்கத்தோடு இந்த வண்டிகள் ஒட்டப்பட்டன.  பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு விரைவு வண்டிகளும் புறநகர வண்டிகளும் ஓரளவுக்கு இயக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னும் சாதாரண பயணி வண்டிகள் இயக்கப்படாதது கிராமப்புற மக்களுக்கு மிகவும் பாதகமாக அமைந்துள்ளது. விரைவு வண்டிகளையும் பெரும்பகுதி புறநகர வண்டிகளையும் இயக்கினாலும் சாதாரண பயணி வண்டிகளை இயக்காத தன் உள்நோக்கம் என்ன? லாபம் வரும் வண்டிகளை மட்டும் ஓட்டிவிட்டு லாபம் வராத வண்டிகளை ஓட்டக்கூடாது என்ற கொள்கையை ரயில்வே அமைச்சகம் எடுத்து உள்ளதா என்று அவர் கேட்டுள்ளார்.

 

பெருந்தொற்று சமூக இடைவெளியை கோருகிறது. இப்போது பேருந்துகள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் இருந்து வருவதற்கு ரயில் வண்டிகள் இல்லாததால் பேருந்துகள் மிகவும் நெரிசலாக உள்ளன. இது சமூக இடைவெளியை மிகவும் பாதிக்கிறது. எனவே சமூக இடைவெளியை உருவாக்க பேருந்துகளுடன்  சாதாரண பயணி வண்டிகளும் இயக்கப்பட்டால் பயணிகள் பரவலாக பயணிப்பது சாத்தியமாகும். சமூக இடைவெளியும் நிறைவேறும். எனவே இந்த காரணத்துக்காக பயணி வண்டிகளை இயக்கவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. கிராமப்புற மக்களுக்கு இது பாரபட்சம் காட்டுவதாகும். ஆகவே    கிராமப்புற மக்களுக்கு உதவிட சாதாரண பயணி வண்டிகளை உடனே இயக்கிட கோருகிறேன். அத்துடன் சாதாரண மக்களுக்காக விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளை இணைத்து விடவும் கூறுகிறேன் என்று ரயில்வே அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்