இந்தியாவில் கரோனா பரவல் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாக பரவிய நிலையில், சில மாநிலங்களில் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது. கரோனா சூழலில் ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் விரைவில் கொண்டாடப்படவுள்ளது. மற்றொருபுறம், கரோனாவுக்கான தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியை இந்தியா முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மாலை நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியினை கூற இருப்பதாக காலையில் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மோடி இதுதொடர்பாக பேசி வருகிறார். அதில், "பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தாலும் கரோனா நம்மை விட்டு போய்விடவில்லை. உலக நாடுகளை விட இந்தியாவில் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மற்ற நாடுகளில் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. தற்போது ஊரடங்கு காலம் முடிந்து வீட்டை விட்டு வெளியே வர தொடங்கியுள்ளோம். இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. அதனை நாம் கெடுத்துவிடக்கூடாது. கரோனா சிகிச்சைக்காக 90 லட்சம் படுக்கைகள் நம் நாட்டில் தயாராக இருக்கிறது. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை. அனைவரும் பண்டிகை காலங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.