இந்தியாவில் பெட்ரோல் - டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதோடு, அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மேற்கு வங்க மாநிலத்தின் தலைமைச் செயலகத்திற்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்தார். அப்போது அவர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பேனர் ஒன்றையும் அணிந்திருந்தார். பேய் முகத்தோடு கூடிய அந்த பேனரில், "உங்கள் வாயில் என்ன இருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் விலை உயர்வு" என எழுதப்பட்டிருந்தது. பிரதமர் மோடியைக் கேள்வியெழுப்பும் விதமாக அவர் இந்தப் பேனரை அணிந்திருந்ததாகக் கருதப்படுகிறது.
இதன்பிறகு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, மோடி அரசால் நாட்டில் உள்ள அனைத்தும் விற்பனை செய்யப்படுவதாக விமர்சித்தார். இதுகுறித்து அவர், “பணமதிப்பிழப்பு நடந்தது. எரிபொருள் விலைகள் உயர்கின்றன. மோடி அரசு நாட்டில் உள்ள அனைத்தையும் விற்பனை செய்கிறது. பி.எஸ்.என்.எல் முதல் நிலக்கரி வரை நாட்டில் உள்ள அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. இது மக்களுக்கு எதிரான, இளைஞர்களுக்கு எதிரான, விவசாயிகளுக்கு எதிரான அரசாங்கம்" எனத் தெரிவித்துள்ளார்.