கரோனா குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது குறித்து பிரதமர் மோடி முன்னணி விளையாட்டு வீரர்கள் 40 பேருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது. 2,12,018 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் குணமாகியுள்ளார். இதனையடுத்து கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது குறித்து பிரதமர் மோடி முன்னணி விளையாட்டு வீரர்கள் 40 பேருடன் இன்று காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.பிரதமர் உடனான இந்த சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, மேரி கோம், பி.டி.உஷா, விஸ்வநாதன் ஆனந்த், ஹிமா தாஸ்,பஜ்ரங் புனியா, பி.வி.சிந்து, ரோஹித் சர்மா, வீரேந்தர் சேவாக, யுவராஜ் சிங், மற்றும் சேதேஸ்வர் புஜாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழிலதிபர்கள்,ஊடகத்தினர் உட்பட பல்வேறு துறையினருடன் பிரதமர் மோடி ஏற்கனவே ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.