இந்தியா அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும், சீண்டினால் பதிலடி கொடுக்க தயங்காது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய சீன எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டத்திற்கு மத்தியில் இன்று காணொளிக்காட்சி மூலமாக 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கூட்டம் தொடங்கியதும் இதில் பங்கேற்ற பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில முதல்வர்கள் ஆகியோர், எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நமது ராணுவ வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது என்று தேசத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நம்மைப் பொறுத்தவரை, நாட்டின் ஒற்றுமையும் இறையாண்மையும் மிக முக்கியமானது. இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் நம்மை யாராவது சீண்டினால், அதற்குப் பொருத்தமான பதிலடி கொடுக்கும் திறன் நம்மிடம் உள்ளது. இந்தியா சமாதானத்தை விரும்புகிறது, ஆனால் சீண்டப்படும்போது, எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தியா ஒரு பொருத்தமான பதிலடியை அளிக்கவல்லது. இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது. நமது சரித்திரத்திலிருந்து நமது வீரத்தைத் தெரிந்து கொள்ளலாம். பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.