மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததாக வெளியான தகவல் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த போராட்டத்தில் இன்றைய தினம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் லக்கிம்பூர் பகுதியில், உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வரும் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான அஜய் மிஸ்ராவின் மகன் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி மத்திய இணை அமைச்சர் மகனின் காரை முற்றுகையிட முயன்றுள்ளனர். அப்பொழுது அமைச்சரின் மகன் வந்த வாகனம் மோதி ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததாகவும், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என 'சம்யுக்தா கிஷான் மோர்ச்சா' என்ற அமைப்பு அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில், ஆத்திரத்தில் மத்திய இணை அமைச்சர் மகனின் காரை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.