உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களை வென்றது. அதன்பிறகு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 12 எம்எல்ஏக்களை தனது கட்சியிலிருந்து மாயாவதி நீக்கினார்.
இதனையடுத்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், சபாநாயகரை சந்தித்து தங்களைத் தனிக் குழுவாகவோ அல்லது கட்சியாகவோ கருதுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் அளித்தனர். மேலும், 12 எம்.எல்.ஏக்களில் ஒன்பது பேர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்துப் பேசினர். இதனையடுத்து, அவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. அடுத்தாண்டு அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது மாயாவதிக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள், சமாஜ்வாதி கட்சியில் இணையப்போவதாக வெளியான தகவல்கள் தொடர்பா, சமாஜ்வாதி கட்சியை மாயாவதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் சிலர் சமாஜ்வாதி கட்சியில் இணையப்போவதாக அக்கட்சி திட்டமிட்டு தகவல்களைப் பரப்பி வருகிறது. எங்கள் கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களை நாங்கள் நீண்டகாலத்திற்கு முன்பாகவே இடைநீக்கம் செய்துவிட்டோம்.
மாநிலங்களவைத் தேர்தலில் தலித் தலைவருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து சதி செய்ததால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் மீது சமாஜ்வாதி கட்சிக்கு கொஞ்சமாவது கரிசனம் இருந்திருக்குமானால் அவர்களை அங்கும், இங்கும் தொங்கலில் விட்டிருக்கமாட்டார்கள். பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களை சமாஜ்வாதி கட்சியில் சேர்த்தால், அந்த கட்சி பிளவு பட்டுவிடும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்" எனக் கூறியுள்ளார்.