இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அமைதி பேச்சு வார்த்தை மூலம் வன்முறைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டன.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மலைவாழ் மக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிப்பூரில் நிலைமை மோசமாக இருப்பதாகக் குற்றச்சாட்டை முன் வைத்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான ஜொலிஷிட்டர் ஜெனரல் துஷார் மேத்தார் ஆஜரானார். அப்போது அவர், மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரடைந்து வருகிறது. மணிப்பூர் மாநில காவல் துறையினர், மணிப்பூர் ரைஃபிள் பிரிவினர், ராணுவ வீரர்கள், மத்திய துணை ராணுவ படை வீரர்கள் என 114 க்கும் அதிகமான கம்பெனி வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 153 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனை கேட்டறிந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி புதிய தகவல்களை கொண்ட அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் கலவரத்தை தடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜுலை 10 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.