மகாராஷ்டிராவில், வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கூட்டணி கட்சிகளும், புதிதாக ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலையொட்டி, எதிர்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று வெளியிட்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர், பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, “சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தியை கொலை செய்தவர்களுடன் பா.ஜ.க தலைவர்கள் இருக்கின்றனர். நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்
ராகுல் காந்தி கையில் இருப்பது அரசியலமைப்பு புத்தகம் இல்லை, அது வெற்று புத்தகம், நகர்ப்புற நக்சல்கள் புத்தகம், மார்க்சிஸ்ட் இயக்கத்தின் புத்தகம் என பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். ராகுல் காந்திக்கு எதிராக பொய்யை பரப்புகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு இது போன்ற ஒரு புத்தகத்தின் நகலை பிரதமர் மோடி பரிசளித்தார். அந்த அரசியலமைப்பு சிவப்பு புத்தகம், குறிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அது முழு அரசியலமைப்பு புத்தகம் அல்ல. பிரதமர் மோடியும், பா.ஜ.கவும் சித்தரிப்பது போல் ராகுல் காந்தி கையில் இருப்பது அரசியலமைப்பு புத்தகத்தின் வெற்று காகிதம் இல்லை. பிரதமர் மோடியை, மீண்டும் ஒரு தொடக்கப்பள்ளியில் சேர்க்க வேண்டியது அவசியம்” என்று பேசினார்.