டிஜிட்டல் உரிமை மற்றும் உள்ளடக்கத் திருட்டுகளுக்கு எதிராக மகாராஷ்டிரா சைபர் கிரைம் பிரிவு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பைரஸிக்கு எதிரான இந்த தொடர் நடவடிக்கைகளில் சைபர் கிரைம் பிரிவுடன் வயாகாம் மீடியா நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் இவர்களின் தொடர் முயற்சிகளுக்கு பலனாய் தோப் டிவி செயலி மற்றும் இணையதளங்களை நடத்திவந்த சுபஞ்சன் கயேட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பைரஸி தளமான இந்த தோப் டிவியில் வயாகாம் நிறுவனத்தின் டிவி சேனல்கள் உட்பட பல்வேறு டிவி சேனல்களும், வூட் போன்ற ஓடிடி தளங்களில் உள்ள நிகழ்ச்சிகளும் திருட்டுத்தனமாக ஒளிபரப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த தோப் டிவி -க்கான மென்பொருள் உருவாக்கம், தொழில்நுட்ப செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைக் கவனித்ததோடு, சட்டவிரோதமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதற்காகவும் சுபஞ்சன் கயேட் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 23 அன்று எஸ்பிளனேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவருக்கு நீதிமன்றம் ஐந்து நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டது. அதேபோல, சட்டவிரோதமாக வருமானம் வருமானம் ஈட்டிய காரணத்தால் அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்துப் பேசிய மகாராஷ்டிரா சைபர் கிரைம் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் ஷிந்த்ரே, "மகாராஷ்டிரா அறிவுசார் சொத்து குற்றப்பிரிவு, குற்றம் சாட்டப்பட்ட சுபஞ்சன் சமிரன் கயேட்டை மேற்கு வங்க மாநிலத்தில் கடத்த மே 22 அன்று கைது செய்தது. தோப் டிவி செயலியின் முக்கிய டெவலப்பர் இவர்தான். அதற்கான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன" என்று தெரிவித்தார்.
அதேபோல, இவ்விவகாரம் குறித்து பேசிய வயாகாம் நிறுவன செய்தித் தொடர்பாளர், “பைரஸிக்கு எதிரான இந்த நடவடிக்கையைத் தொடர்ந்ததற்காக மகாராஷ்டிரா சைபர் கிரைம் காவல்துறைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இம்மாதிரியான சட்டவிரோதமான பதிப்புரிமை மீறல்கள் என்பது படைப்பாற்றல் சமூகத்தைப் பெருமளவில் பாதிக்கும் ஒரு கடுமையான குற்றம் என்பதைத் தெளிவுபடுத்துவது முக்கியம். இதுபோன்ற குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்றார்.