மகாராஷ்ட்ரா மாநிலத்தின் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை நவாப் மாலிக்கை விசாரணைக்காக அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை, விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்துள்ளது.
அண்மையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், அவரது சகோதரர்கள் அனீஸ், இக்பால், உதவியாளர் சோட்டா ஷகீல் உள்ளிட்டோர் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பாலை கஸ்டடியில் எடுத்தது.
அதன் தொடர்சியாக தற்போது நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். தாவூத் இப்ராகிமின் உதவியாளர்களிடமிருந்து நிலம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்ட பிறகு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது நவாப் மாலிக், ”நான் தலைவணங்க மாட்டேன். நாங்கள் போராடி வெல்வோம், அனைவரையும் அம்பலப்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.