இன்று (28/06/2020) காலை 11.00 மணிக்கு 'மன் கீ பாத்' நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது; "இந்தியாவுடன் யாரும் மோத முடியாது; நமது எல்லைகள் காக்கப்படும்; தனக்கு வரும் பிரச்சனைகளை எப்போதும் வாய்ப்பாகவே நம்நாடு மாற்றிக் கொண்டு வந்திருக்கிறது. லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது. உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. நமது இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்கள்- ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்காக துக்கத்தில் இருக்கிறது.
உள்ளூர் பொருட்களை வாங்கி உற்பத்தியை ஊக்குவித்ததால் இந்தியா மிகப்பெரிய வெற்றியடையும். பாதுகாப்பு துறையிலும் இந்தியா சுய சார்பு அடைய தமிழகத்தைச் சேர்ந்த மோகன் ராமமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் ஆறு மாதம் கடினமான இருந்ததால் எஞ்சிய ஆறு மாதமும் இப்படித்தான் இருக்கும் என கூற முடியாது. சுயசார்பை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது; மக்கள் ஒத்துழைப்பின்றி எந்த திட்டமும் வெற்றி பெறாது. பொதுமுடக்கம் முடிய உள்ள நிலையில் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விட அரசு தயாராகி வருகிறது.
ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்ப நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் மிக கவனம் தேவை. இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைகாதீர்கள்.
மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவற்றுக்கான தேவை உலக அளவில் அதிகரித்திருக்கிறது. இந்திய பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆரோக்கியமான பூமியை உருவாக்க எல்லா வகையிலும் நாம் நமது பங்களிப்பை வழங்க முடியும். கரோனா வைரஸ் நாம் வாழக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக மாற்றியிருக்கிறது". இவ்வாறு பிரதமர் பேசினார்.