எல்.ஐ.சி. பொதுப்பங்கு விற்பனையில் பங்குகளை வாங்க சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் இதுவரை இல்லாத அளவாக 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்று 21,000 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பங்கு விற்பனை கடந்த மே 4- ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், இன்று (09/05/2022) மாலை 04.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த நிலையில், நேற்று (08/05/2022) வரை சில்லறை முதலீட்டாளர்கள் சுமார் 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த 2008- ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பொதுப்பங்கு விற்பனையின் போது, 40 லட்சத்து 80 ஆயிரம் சிறு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. எல்.ஐ.சி. பங்குகளுக்கு சில்லறை விற்பனை பிரிவில் 1.53 மடங்கும், ஊழியர்கள் பிரிவில் 3.7 மடங்கும், அதிகமாக விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
ஊழியர்களுக்கு ஒரு பங்குக்கு 45 ரூபாய் தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் தள்ளுபடியும் அறிவித்திருப்பதும் காரணமாக, கூறப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய புதிய பங்கு வெளியீடு என்ற பெருமையை எல்.ஐ.சி. பெற்றுள்ள நிலையில், தற்போது அதிக விண்ணப்பங்களிலும் சாதனை படைத்துள்ளது