இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்துள்ளன. அந்தக் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டத்திலிருந்தே பாஜக தரப்பில் இருந்து ‘இந்தியா’ எனும் பெயர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே கடும் அமளியால் அவைகள் முடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று பாஜக எம்.பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா எனும் பெயரை மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, “ஆட்சி செய்ய விரும்புபவர்கள், நாட்டை உடைத்த கிழக்கு இந்தியக் கம்பெனி, இந்தியன் முஜாய்தீன் உள்ளிட்டவற்றில் உள்ள பெயரைக் கொண்டுள்ளனர். மக்கள் ஒரு போதும் தவறாக வழிநடத்தப்படமாட்டார்கள்” என்று தெரிவித்ததாக ரமேஷ் பிதுரி எம்.பி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடியின் இந்த பேச்சு குறித்து மாநிலங்களவையில் பேசுகையில், “நாங்கள் மணிப்பூரைப் பற்றி பேசுகிறோம். ஆனால் பிரதமர் மோடி கிழக்கு இந்திய கம்பெனியை பற்றி பேசுகிறார்”எனத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியின் இந்த கருத்து டுவிட்டரில், “மோடி அவர்களே, உங்கள் விருப்பப்படி எங்களை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள்; நாங்கள் இந்தியா தான். மணிப்பூர் துயர் துடைக்க உதவுவதோடு, ஒவ்வொரு பெண்கள், குழந்தைகளின் கண்ணீரையும் துடைப்போம். மணிப்பூர் மக்கள் மத்தியில் அன்பையும், அமைதியையும் கொண்டு வர பாடுபடுவதோடு, மணிப்பூரை மீட்டுருவாக்கம் செய்வோம்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.