ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாகக் கடந்த சில மாதங்களாகக் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அளவுக்கு மிஞ்சிய மழை தொடர்ந்து பொழிந்து வருகிறது. இதனால் சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது.
நேற்று முன்தினம் சிம்லாவில் உள்ள கிருஷ்ணா நகர் என்ற பகுதியில் பெய்த கன மழைக் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 6 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரைப் பதைபதைக்க வைத்துள்ளது. இதேபோன்று ஃபகில், சம்மர் ஹில் என்ற இரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழைக் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 57 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. கனமழைக் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.