குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று முன்தினம் (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்தத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் தமிழர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்தனர். அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில்தான் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த விமானம் பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு செல்கிறது. முன்னதாக தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களைப் பெற்ற கொச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் இந்தத் தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் காலை 10.30 மணிக்கு கொச்சி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், கேரளாவைச் சேர்ந்த 23 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.