இன்று குடியரசு தின அணிவகுப்பில் நாட்டிலேயே மிகவும் பழமையான பிரிவு அசாம் ரைபிள் படை. அப்படி பெருமை வாய்ந்த ஒரு படையை முதன்முதலாக ஒரு பெண் தலைமை தாங்கி அணிவகுப்பு நடத்தி சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் 70-வது குடியரசு நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ராஜபாதையில் அணிவகுப்பு மரியாதையின் பொழுது அசாம் ரைபிள் படையை 30 வயதான பெண் மேஜர் குஷ்பு கன்வர் வழிநடத்தினார். கடந்த 2012 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் தற்போது இந்த சாதனையை படைத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் ஒருவரின் மகளான குஷ்பு ஒரு பெண் குழந்தையின் தாயும் ஆவார்.
இது பற்றி அவர் கூறுகையில், 'இந்தியாவில் உள்ள எந்த சாமானிய பெண்ணும் என்னை போல் ஒரு சாதனையை செய்ய வருங்காலத்தில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். நாட்டின் மிகவும் பழமையான அசாம் ரைபிள் படையை வழிநடத்தி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறேன். நாங்கள் தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, 4.30 மணியில் இருந்து பயிற்சி செய்வோம். அணிவகுப்பிற்காக தினமும் 8 மணி நேரம் பயிற்சி எடுத்தோம். அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் நடந்தபோதும், மியான்மர் எல்லையில் ஊடுருவல் நடந்தபோதும் அதனை தடுத்து பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்தினோம். மேலும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம்' என அவர் கூறினார்.