கேரளாவில் கரோனா வார்டில் பணிபுரிந்து, நோய்த்தொற்றுக்கு ஆளான செவிலியர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது. 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 4000க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 109 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இந்தக் கரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கரோனா வார்டில் பணிபுரிந்து, நோய்த்தொற்றுக்கு ஆளான செவிலியர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.
இத்தாலியிலிருந்து கேரளா திரும்பிய இளைஞரிடம் இருந்து அவரது 93 வயது தாத்தாவுக்கும், 88 வயதான பாட்டிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. மேலும் அவரது குடும்பத்தில் 11 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.அனைவரும் குணமடைந்தநிலையில்,முதிய தம்பதியர்கள் இருவருக்கும் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த மருத்துவமனையில் அவர்களைக் கவனித்துக்கொண்டு செவிலியர் ரேஷ்மா மோகன்தாஸ் கரோனா தொற்றுக்கு ஆளானார்.இந்தியாவில் வைரஸ் பாதித்த முதல் சுகாதாரப் பணியாளர் இவர்தான்.
தொடர் சிகிச்சைக்குப் பின் வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்ட அவர் வீடு திரும்பியுள்ளார்.மருத்துவமனை ஊழியர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தோடு அவரை வழியனுப்பி வைத்தனர்.கரோனாவிலிருந்து மீண்டு வந்தது குறித்துப் பேசிய அவர், "தனிமைப்படுத்தல் முடிந்ததும்,மீண்டும் கரோனா வார்டில் நிச்சயம் பணியாற்ற வருவேன்" எனத் தெரிவித்துள்ளார்.செவிலியர் ரேஷ்மாவின் இந்தச் சமூக அர்ப்பணிப்பு பலரையும் நெகிழ வைத்துள்ளது.