மேற்குவங்கம் மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி கட்சிகளின் கவுன்சிலர்கள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, அம்மாநிலத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மேற்குவங்கம் மாநிலத்தில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் புதிதாக தேர்வான அனுபம் தத்தா என்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் கொல்கத்தா புறநகர் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த அவரை, அங்கிருந்த நபர் ஒருவர் சர்வ சாதாரணமாக, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, தப்பிக்கும் காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.
இதேபோல், புருலியா மாவட்டத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரான தபன் காண்டுவையையும், அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதால், அம்மாநிலத்தில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
கவுன்சிலர்கள் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, புருலியா மாவட்டத்தில் நாளை (15/03/2022) 24 மணி நேர பந்த் நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.