டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வந்தார்.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் தொடர்ந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் நேற்று (10-05-24) விசாரணை நடைபெற்றது. அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதே சமயம் ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி அளித்தும், முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உத்தரவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது அவருடைய கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் உட்பட எதிர்கட்சியினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வந்தனர். கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் தீர்ப்பு நகல் திகார் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (10-05-24) மாலை திகார் சிறையிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் இருந்து வந்த அவருக்கு வெளியே காத்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (11-05-24) டெல்லி ஹனுமன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அவர், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொண்டர்கள் முன்பு பேசினார். அப்போது அவர், “ஆம் ஆத்மி கட்சியை அழிக்க முடியாது என்பதற்கு இங்கு உள்ளவர்களே சாட்சி. எங்களை சிறைக்கு அனுப்பிவிட்டு, நீங்கள் வெற்றி பெற முடியாது. எதிர்கட்சிகளின் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கை பா.ஜ.க அரசு செய்து வருகிறது.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெறும் 220-230 இடங்களில் மட்டுமே வெல்லும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் செய்த ஊழல்களை நீங்கள் மறைக்க முடியாது. ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறும் மோடி சில ஊழல்வாதிகளை பா.ஜ.க.வில் சேர்த்துள்ளார். பா.ஜ.கவுக்கு எதிராக நாடு முழுவதும் பரப்புரை செய்வேன். எல்லா கட்சிகளையும் அழித்துவிட பா.ஜ.க நினைக்கிறது. ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் மோடி நசுக்க நினைக்கிறார். ஆம் ஆத்மி கட்சி, 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள ஒரு சிறிய கட்சி.
ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த முடியாமல் 4 தலைவர்களை பிரதமர் மோடி சிறையில் அடைத்தார். ஆம் ஆத்மி மட்டும் தான் நாட்டுக்கு நல்ல எதிர்காலம் தரும் எனப் பிரதமர் மோடி நம்புகிறார். கடந்த 75 ஆண்டுகளில் ஆம் ஆத்மி போல் எந்தக் கட்சிக்கும் தொல்லை கொடுக்கப்பட்டது இல்லை. ஜுன் 4ஆம் தேதியுடன் பிரதமர் ஓய்வு பெற்றுவிடுவார். பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17ஆம் தேதி 75 வயதாகிறது. கட்சியில் உள்ள தலைவர்கள் 75 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுவார்கள் என்று விதியை பிரதமர் மோடி வகுத்தார். லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது செப்டம்பர் 17 அன்று பிரதமர் மோடி ஓய்வு பெறப் போகிறார். அவர்களின் அரசு அமைந்தால் முதலில் யோகி ஆதித்யநாத்தை தூக்கி எறிந்துவிட்டு, அமித் ஷாவை நாட்டின் பிரதமராக்குவார்கள். பிரதமர் மோடி அமித் ஷாவுக்கு ஓட்டு கேட்கிறார். மோடியின் உத்தரவாதத்தை அமித்ஷா நிறைவேற்றுவாரா?” என்று கூறினார்.