பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை, இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அதே போல் இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ளவும் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநில விவகாரம் தொடர்பாக இந்திய அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய முடிவுகளை இன்று நடைபெற்ற பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் உயர் அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை டெல்லிக்கு அனுப்ப மாட்டோம் எனவும், இந்தியா- பாகிஸ்தான் இடையே தூதரக ரீதியிலான உறவுகளை குறைத்துக்கொள்ளவும், பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், ஏற்கனவே அந்த மாநிலம் முழுவதும் அதிக அளவில் துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.