காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 3 பேர் காயம்
காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்றும் பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு மாவட்டத்தின் அர்னியா செக்டார் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்கள் மீதும் அப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் வசித்துவரும் 3 பேர் காயமடைந்தனர். இதில் இரண்டு பெண்களும், ஒரு 12 வயது சிறுவனும் அடங்குவர். உடனடியாக காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை முதல் எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளை நோக்கி கையெறி குண்டுகளை வீசினர். சாய், டிரேவா, ஜபோலி ஆகிய கிராமங்களில் உள்ள ஒரு கோயில் மற்றும் இரண்டு வீடுகள் சேதமாகின. அங்கிருந்த கால்நடைகளும் இறந்துள்ளன.