கணவரின் நலன் வேண்டி நாடு முழுவதும் நேற்று முன்தினம் கவ்ரா சவுத் விரதம் அனுசரிக்கப்பட்டது. இந்த கவ்ரா சவுத் விரதத்தில் பெண்கள் உணவு உண்ணாமல், விரதம் இருந்து தீபம் ஏற்றி சல்லடையில் நிலவு பார்த்து, பின்பு அந்த சல்லடையில் தங்களின் கணவனை பார்ப்பார்கள். இதனால் தங்களின் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று வழிவழியாக நம்பி வருகின்றனர்.
கணவன் மார்கள், நலமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் பூஜையை செய்து வரும் அதே தினத்தில் தான் கணவனை விரட்டி விரட்டி மனைவி புரட்டி எடுத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் மனிஷ் திவாரி, தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதில் அவரது மனைவி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மனிஷ் திவாரி, வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் மணிஷ் திவாரி, அந்த பெண்ணுடன் காசியாபாத்தில் உள்ள சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தைக்கு மணிஷ் திரியின் மனைவி மற்றும் அவரது தாய் இருவரும் வந்துள்ளனர். அப்போது தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து கோபமடைந்த அவரது மனைவி, சாலையிலேயே கணவரை லேட் ரைய்ட் வாங்கினார். இதை மணிஷ் திவாரியுடன் வந்த பெண் தடுக்க வர, அவரையும் கடுமையாக தாக்கினார். தன்னுடன் வந்த பெண்ணை அடித்ததும், அதுவரை அடிவாங்கி வந்த மணிஷ் திவாரி, பதட்டமடைந்து, அவரது மனைவி மற்றும் அவரது தாயிடமிருந்து தனது பெண் தோழியை பாதுகாக்க முயற்சித்தார். ஆனால் அதையும் மீறி பல அடிகள் விழுந்தன. அதுமட்டுமின்றி சாலையில், நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிலர் தடுக்க வந்தபோது, மணிஷ் திவாரியின் மனைவி விவரத்தை சொல்ல, அவர்களும் சேர்ந்து மணிஷ் திவாரியையும், அவரது பெண் தோழியையும் தாக்கினர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்ய, மணிஷ் திவாரியின் மனைவி தனது கணவர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடித்து வருகின்றனர்.
கணவர் நலன் வேண்டி மனைவிமார்கள் நோன்பிருந்து பூஜை செய்யும், அதே நாளில் மணிஷ் திவாரியை, அவரது மனைவி புரட்டி எடுத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.